திருமணத்துக்காக வைத்திருந்த ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை
பண்ருட்டி ஊழியர் வீட்டில் திருமணத்துக்காக வைத்திருந்த ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
பண்ருட்டி
தனியார் நிறுவன ஊழியர்
பண்ருட்டி திருவதிகை ராஜாப்பாளையத்தை சேர்ந்தவர் சிவா(வயது 38). இவர், புதுச்சேரி திருவெண்டார் கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் தம்பிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. எனவே அதே ஊரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சிவாவின் மனைவி சென்று இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணி என்பதால் சிவா வீட்டை பூட்டிவிட்டு தனியார் நிறுவனத்துக்கு சென்று இருந்தார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
திருமணத்துக்காக வைத்திருந்த நகை கொள்ளை
பின்னர் வீட்டின் அலமாரியில் திருமண செலவுக்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச்சென்றனர். நேற்று காலை பணி முடிந்ததும் வீட்டிற்கு வந்த சிவா, நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.