தரை வழித்தடம் அடைக்கப்பட்டதால் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் செல்ல அனுமதிக்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மனு
தர்மபுரி:
பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி அக்ரஹாரம் மேல் தெருவை சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவர் தனது குடும்பத்தினருடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அப்போது அவருடைய 2 மகள்கள் ஹெலிகாப்டர் பொம்மை, காகிதத்தில் வரையப்பட்ட ஹெலிகாப்டரின் படம் ஆகியவற்றை கைகளில் எடுத்து வந்தனர். இதுகுறித்து கணேசன் கூறுகையில், கே.அக்ரஹாரம் கிராமத்தில் எங்கள் குடும்பம் 3 தலைமுறைகளாக வசித்து வருகிறது. என்னுடைய வீட்டிற்கு காலம்காலமாக சென்று வந்த வழிப்பாதையை வீட்டருகே உள்ளவர்கள் அடைத்து தடுப்பு சுவர் கட்டி விட்டனர். இது பற்றி கேட்டபோது தங்களுக்கு சொந்தமான இடம் என்று தெரிவித்தனர். இதனால் வழித்தடம் இல்லாததால் எனது சொந்த வீட்டிற்கு சென்று வர முடியவில்லை. வேறு வழியில்லாமல் கடந்த சில மாதங்களாக உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருக்கிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. தரை வழியில்தான் எனது வீட்டிற்கு சென்று வர முடியவில்லை. வான்வழியாக ஹெலிகாப்டரிலாவது சென்று வர உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.
பொம்மை ஹெலிகாப்டரை கையில் பிடித்தபடி விவசாயி தனது குடும்பத்துடன் நூதன முறையில் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.