திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து?40 கிராம மக்கள் பீதி; டிரோன் மூலம் வனப்பகுதியில் போலீசார் ஆய்வு
திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதாக 40 கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் டிரோன் கேமரா மூலம் வனப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
ரிஷிவந்தியம்,
பயங்கர வெடிச்சத்தம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வாணாகரம் பகுதியில் நேற்று காலை 11.15 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று வட்டமடித்தபடி சென்றது. இதையடுத்து 12 மணியளவில் 2 விமானங்கள் அடுத்தடுத்து சென்ற சத்தமும் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதியம் 1 மணியளவில் மையனூர், பகண்டைகூட்டுரோடு, தொண்டனந்தல், அவிரியூர், லா.கூடலூர், அத்தியூர், அரியலூர், மேலந்தல், மணலூர்பேட்டை உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதை உணர்ந்த அப்பகுதி கிராம மக்கள் கடும் பீதியில் உறைந்தனர். இந்த பீதி அடங்குவதற்குள் காலையில் இவ்வழியாக சென்ற ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி மையனூர் வனப்பகுதியில் கீழே விழுந்து விட்டதாக அப்பகுதி கிராமங்களில் காட்டுத்தீபோல் தகவல் பரவியது.
டிரோன் மூலம் ஆய்வு
இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பகண்டை கூட்டுரோடு இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் தலைமையிலான போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு பகுதிகளுக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் டிரோன் கேமராவை பறக்கவிட்டு மேற்கண்ட கிராமங்களில் உள்ள வனப்பகுதிகளில் விபத்து ஏதும் நடைபெற்றுள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் அப்பகுதிகளில் விபத்துகள் நடைபெற்றதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடியோ வைரல்
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மேற்கண்ட சம்பவம் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம். கடந்த 2021-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை தற்போது பதிவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதுபோன்ற பொய்செய்தியை பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். சத்தம் கேட்டது பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு நேரிலோ அல்லது தொலைபேசி (7598172009) வாயிலாகவோ தகவல் தெரிவிக்கலாம் என்றார்.