கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விவரங்களை அறிய உதவி மையங்கள்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விவரங்களை அறிய உதவி மையங்கள்
x

அரியலூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான விவரங்களை அறிய உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அரியலூர்

மகளிர் உரிமைத்தொகை

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் முதல் கட்டமாக பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்த சிறிது நேரத்தில் அவரவர் வங்கி கணக்கிற்கு பணம் சென்றதால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் 55 லட்சம் பெண்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. என்ன காரணத்திற்காக அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. தகுதி இருந்தும் சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பின் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வருகிற 19-ந்தேதி முதல் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

உதவி மையங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் அறியவும், அவர்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்கவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதன்படி, அரியலூர் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) குமரையா - 9626725241, 04329228151, அரியலூர் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோவிந்தராசு - 9843869337, 04329222058, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் உமாசங்கரி -7598720601, 04331245352, அரியலூர் தலைமையிடத்து துணை தாசில்தார் (பொறுப்பு) பசுமதி - 9786326209, 04329222062.

30-ந்தேதி வரை...

ஜெயங்கொண்டம் தலைமையிடத்து துணை தாசில்தார் அண்ணாதுரை- 9095689998, 04331-250220, செந்துறை தலைமையிடத்து துணை தாசில்தார் செல்வக்குமார் - 9025277223, 04329242320, ஆண்டிமடம் தலைமையிடத்து துணை தாசில்தார் பார்த்திபராஜன் - 9841304410, 04331299800 ஆகியோரை தொடர்பு கொண்டு பயனாளிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த உதவி மையங்கள் வருகிற 30-ந் தேதி வரை செயல்படும். விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.விடம் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம்.

மேலும், இந்த திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு வருகின்ற குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புகளை நம்பி ஓ.டி.பி. எண்கள் மற்றும் இதர விவரங்களை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். இதுபோன்ற விவரங்கள் கேட்கப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story