ஆடுகளை ரத்த கழிச்சல் நோய் தாக்கும் அபாயம்


ஆடுகளை ரத்த கழிச்சல் நோய் தாக்கும் அபாயம்
x

ஆடுகளை ரத்த கழிச்சல் நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழன்) 3 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு முறையே 12 கி.மீ., 16 கி.மீ., 16 கி.மீ.வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம் 40 சதவீதமாகவும், அதிகபட்சமாக 90 சதவீதமாக இருக்கும்.

குடற்புழு நீக்கம்

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் பொதுவாக மழைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் குடற்புழுக்களின் நோயை இளநிலை பருவ புழுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதால், செம்மறி மற்றும் வெள்ளாடுகளில் உருளைபுழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம்.

இதேபோல் ஆடுகளில் ரத்த கழிச்சல் நோய் எய்மீரியா என்கிற ஒரு செல் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. ஆடுகளில் குறிப்பாக சுகாதாரமற்ற சூழலில் சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் அடைத்து வளர்க்கப்படும் குட்டிகளில் ரத்த கழிச்சல் நோய் அதிகமாக காணப்படும். நோயினால் பாதிக்கப்பட்ட குட்டிகளில் தீவனம் திண்ணாமை, உடல் மெலிவு, ரத்த சோகை மற்றும் நோய் தீவிரத்தால் இறப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும். பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சல்பா மற்றும் ஆம்ரோலியம் மருந்துகளை கொடுக்கலாம். சுகாதாரமான பண்ணை பராமரிப்பு மற்றும் இளம் குட்டிகளை பெரிய ஆடுகளில் இருந்து பிரித்து வளர்ப்பதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story