கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்கூட்டமைப்பின் மாநில தலைவர் பேட்டி


கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்கூட்டமைப்பின் மாநில தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 22 Sep 2023 7:00 PM GMT (Updated: 22 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

தமிழகத்தில் கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோழி வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் தெரிவித்தார்.

எந்த தொடர்பும் இல்லை

தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகத்தில் சுத்தமான கறிக்கோழிகளை விற்பனை செய்து வரும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசை வலியுறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து மாநில தலைவர் துரைராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல்லில் சவர்மா, கிரில் சிக்கன், தந்தூரி உள்ளிட்ட துரித உணவுகளை சாப்பிட்ட பள்ளி மாணவி பலியானதோடு, பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கறிக்கோழி இறைச்சிக்கடை உரிமையாளருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சுத்தமான, தரமான கோழிகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம்.

தொழில் பாதிப்பு

உணவகங்களில் நடைபெறுவது எங்களுக்கு தெரியாது. உணவகங்களில் கோழிகள் உணவாக சமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் வரை கோழி வணிகர்கள் எப்படி கண்காணிக்க முடியும்? கறிக்கோழி இறைச்சி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளது அவருடைய குடும்பத்தினர் மற்றும் பிற வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்கள் கோழி இறைச்சி வாங்கவே தயங்கும் நிலை உருவாக்கிவிட்டது. புரட்டாசி மாதத்தில் கோழி விற்பனை குறைவாக தான் இருக்கும். தற்போது இந்த பிரச்சினையால் விற்பனை மேலும் குறைந்து தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு சுத்தமான கோழிகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கேரள அரசு சவர்மாவை விற்க தனி உரிமம் வழங்கி கண்காணிப்பதை போல, தமிழகத்திலும் சவர்மாவிற்கு தடை விதிக்காமல் கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிப்புடன் சவர்மாவை விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் மற்றும் கோழி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story