பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான சண்டை மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் நாட்டுக்கோழிகள் வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமத்திவேலூரில் நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தைக்கு பரமத்திவேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல், திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
பண்டிகை முடிந்ததும் நாட்டுக்கோழிகளை இறைச்சிக்காக வாங்குவதற்காக பொதுமக்கள் வழக்கத்தைவிட அதிகளவில் வந்திருந்தனர். சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில் கருஞ்சதை, மயில் காகம், கருங்கண், கருங்காலி, கிளிமூக்கு, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் கொண்டுவரப்பட்டிருந்தன.
நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கி சென்றனர். இதனால் நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தரமான நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுகோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது. சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல் ஒன்று ரூ.1,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.