கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
நாமக்கல்:
கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 2 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (வியாழன்) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்ப நிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும்.
காறறு மணிக்கு முறையே 4 கி.மீ, 4 கி.மீ., 6 கி.மீ. வேகத்தில் தென்கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் நாமக்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்பசலனம் அதிகமாகி உள்ளதால், பூச்சி இனங்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாக இருக்கும்.
ஈ கட்டுப்பாடு முறைகள்
அதனால் கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும். பண்ணைகளில் தண்ணீர் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த நிப்பில்களை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும்.
பகல் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மாடு மற்றும் ஆடுகளின் பால் உற்பத்தி, உடல் எடை குறையாமல் இருப்பதற்கு அடர்தீவனம், பசுந்தீவனம் போதுமான அளவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.