நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்வு-மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் எதிரொலி
நாமக்கல்:
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருப்பதால் நாமக்கல் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது.
கறிக்கோழி விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு அதிரடியாக ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.102 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருப்பதால், கறிக்கோழிக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கறிக்கோழி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கறிக்கோழி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து இருப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
முட்டைக்கோழி
முட்டைக்கோழி கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர்.
எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.70 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக நீடிக்கிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.