தேவகோட்டை அருகே அக்காள் கணவர் அடித்துக்கொலை-வாலிபர் கைது
தேவகோட்டை அருகே அக்காள் கணவரை அடித்துக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 38). இவருடைய மனைவி கவிதா. இவர்கள் புக்குடியில் வசித்து வந்தனர். சாக்கோட்டையில் வசிக்கும் கவிதாவின் தந்தை சாத்தப்பனுக்கு 2 மனைவிகள். மூத்த மனைவியின் மகள் கவிதா. 2-வது மனைவியின் மகன் ராசு.
இந்நிலையில் நேற்று முன்தினம் புக்குடி கிராமத்தில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு ராசு வந்தார். இதையடுத்து இரவில் ரவிச்சந்திரனும், ராசும் ஒன்றாக சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராசு கீழே கிடந்த விறகு கட்டையை எடுத்து ரவிச்சந்திரனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவேகம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசுவை கைது செய்தனர். மதுபோதையில் அக்காள் கணவரை வாலிபர் கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.