கொல்லிமலையில் மூலிகை பண்ணை அமைக்கப்படும்


கொல்லிமலையில் மூலிகை பண்ணை அமைக்கப்படும்
x

கொல்லிமலையில் மூலிகை பண்ணை அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துஉள்ளார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

நோயை கண்டறியும் திட்டம்

கொல்லிமலை ஒன்றியம் வாழவந்தி நாடு ஊராட்சியில் உள்ள எல்லைக்கிராய்பட்டியில் மலைவாழ் மக்களுக்கு ஹீமோகுளோபினபதி நோயை கண்டறியும் திட்டம் மற்றும் உயிர்காக்கும் உயர்ரக மருந்துகள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் வழங்கும் திட்டம் ஆகியவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

உயர்ரக மருந்துகள் மூலமாக தமிழகத்தில் உள்ள 9 லட்சத்து 13 ஆயிரம் மலைவாழ் மக்கள் பயனடைவர். 1,021 டாக்டர்கள், 980 மருந்தாளுனர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் டாக்டர்களுக்கான தேர்வை 25 ஆயிரம் பேரும், மருந்தாளுனர்களுக்கான தேர்வை 43 ஆயிரம் பேரும் எழுதி உள்ளனர். தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரது தலைமையில் எம்.ஆர்.பி. குழுவினர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் முடிவற்றதும் விரைவில் காலியிடங்கள் நிரப்பப்படும்.

மூலிகை பண்ணை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானிலிருந்து திரும்பியதும் அவரிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போது 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முறையிட உள்ளோம். அந்தியூர் பகுதிகளில் 18 கிராமங்களில் சாலை வசதி இல்லாத நிலை உள்ளது. இருந்த போதிலும் அங்குள்ள மக்களுக்கு வனத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். வேலூர் மாவட்ட சிறுவன் இறந்த சம்பவம் நடந்த கிராமத்திலும் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அனைத்து மருத்துவமனைகளிலும் ஏ.எஸ்.வி. என்ற பாம்பு கடி மருந்து 100 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கொல்லிமலையில் 25 ஏக்கரில் மூலிகைப் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சத்தீஸ்கார், மராட்டியம் அனந்தபூரிலிருந்து சித்த மருத்துவத்திற்கு தேவையான மூலப்பொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த மூலப் பொருள்களின் முக்கியமானது மிளகு. மற்றொரு மூலப்பொருள் அஸ்வகந்தா என்று அமுக்கிரா கிழங்கு அசாமில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த கிழங்கு தற்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. அதேபோல கொல்லிமலையையும் சித்த மருந்துகள் தயாரிப்பு மையமாக மாற்றப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story