இங்கே....சுரங்க நடைபாதை இருந்தால் ஆபத்தில்லீங்க...
கோவை காந்திபுரத்திலும் சுரங்க நடை பாதை அமைத்தால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். என்று சமூக ஆர்வலர்கள் கூறினார்.
கோவை மாநகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் போக்குவரத்து மிகவும் நெருக்கடியாக உள்ளது. ஏனென்றால் மத்திய பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையம் மற்றும் வணிக பகுதியான கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு என்று எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளாக விளங்குகிறது. எனவே காந்திபுரம் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
திக்...திக்...பயத்துடன்
தினசரி இங்கே லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் சாலையை கடக்கும் போது பல்வேறு விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி சாலையை கடக்க பொதுமக்கள் ஒருவித திக்...திக்...பயத்துடன்தான் செல்ல வேண்டி உள்ளது.
ஏனெனில் அந்த பகுதியில் எப்போது எங்கிருந்து வாகனம் வருமோ என்று தெரியாத நிலையில் வாகனங்கள் வந்து செல்லும். ஆகையால் அங்கு சாலையை கடப்பதற்கு சுரங்க நடைபாதை அமைக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
கோவை காந்திபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் சாலையை கடக்கின்றனர்.
இதனால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது. காந்திபுரம் மேம்பாலம் கட்டுவதற்கு முன்பு இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
அப்போது மேம்பால கட்டுமான பணிகளுக்காக அந்த நடைபாதை மேம்பாலத்தை அப்புறப்படுத்தினார்கள்.
சுரங்க நடைபாதை
ஆனால் தற்போது மேம்பாலம் கட்டி சில வருடங்கள் ஆகிய பின்பும் அங்கு நடைபாதைக்கான எந்த வழிமுறைகளும் செய்யப்படாமல் உள்ளது.
தற்போது அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதன் கீழ் பகுதியில் 5 இடங்களில் நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதுபோல் கோவை காந்திபுரத்திலும் சுரங்க நடை பாதை அமைத்தால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். என்று கூறினார்.
எது எப்படியோ இங்கே சுரங்க நடைபாதை இருந்தால் சாலையை கடக்கும் பொதுமக்களுக்கு ஆபத்தில்லீங்க என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.