வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது: கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்


வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது: கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 3:45 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்..

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ந்தேதி, மாநில அரசின் சார்பில் வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பாராட்டு பத்திரம் மற்றும் ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த விருதை பெறுவதற்கு, பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை திருமணங்களை தடுத்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருக்க வேண்டும்.

மேலும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் தகுதிகள்

ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை தவிர்த்து பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற சாதனை புரிந்த குழந்தைகளுக்கு இந்த விருது மாநில அரசால் வழங்கப்பட இருக்கிறது.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த விருதிற்கு 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2022 ன் படி) தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன், குழந்தையின் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார்எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்

31-ந்தேதி கடைசி நாள்

இணைக்கப்பட்ட விவரங்களை வருகிற 31-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம். மேலும் விருதிற்கான விண்ணப்பங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர், காவல் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலத்திலும் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story