திருக்கோவிலூரில் பரபரப்பு: ஜவுளிக்கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா - வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


திருக்கோவிலூரில் பரபரப்பு: ஜவுளிக்கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா - வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 1:41 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் ஒரு ஜவுளிக்கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா ஒன்று இருந்தது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடை ஒன்றுக்கு நேற்று இரவு சுமார் 7:30 மணி அளவில் பெண் ஒருவர் ஜவுளி எடுக்க வந்திருந்தார். தான் புதிதாக தேர்வு செய்த உடையை, தனக்கு சரியாக இருக்கிறதா என்று போட்டு பார்க்க அங்கு உடை மாற்றுவதற்காக உள்ள பிரத்தேக அறைக்கு சென்றார்.

அப்போது அவர் புது துணியை போட்டுபார்த்தார். பின்னர், கதறை திறந்துக்கொண்டு அவர் வெளியே வர முயன்ற போது, மேல் பகுதியில் கண்ணாடி ஒன்று ஒன்று இருந்ததை அவர் பார்த்தார்.

இதனால் சந்தேகத்தின் பேரில், அதை தனது கையால் தட்டிப்பார்த்தார். அப்போது, அதில் இருந்து ஒரு செல்போன் கீழே விழுந்தது. உடன் அந்த அறைக்கு அருகே வெளியே நின்றிருந்த ஒரு பெண், ஓடிச்சென்று அந்த செல்போன், அதில் இருந்து விழுந்த சிம்கார்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டார்.

இதன் பின்னர் தான் செல்போனில் கேமராவை ரகசியமாக வைத்து, உடை மாற்றுவதை பதிவு செய்து இருக்கலாம் என்று அந்த பெண்ணுக்கு தெரியவந்து, அதிர்ச்சிக்கு உள்ளானார்.

பெண்ணை பிடித்து விசாரணை

இதை பார்த்த கடை நிர்வாகத்தினர் ஏதும் புரியாமல் திருதிருவென விழித்தனர். என்ன நடக்கிறது என்பதை கூட உணர முடியாத நிலைக்கு ஆளாகினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், நடந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கூறினார். இதனால் வாடிக்கையாளர்கள் கடையை சேர்ந்த நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையே தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து செல்போனை ஓடிச்சென்று எடுத்த அந்த பெண்ணை, விசாரணைக்காக திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

பணம் பறிக்க முயற்சி?

மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை, போலீசார் மற்றும் கடை நிர்வாகத்தினர் பார்த்தனர். அப்போது, செல்போனை ஓடிச்சென்று எடுத்த அந்த பெண் நேற்று முன்தினம் கடைக்கு வாடிக்கையாளர் போன்று வந்துள்ளார். தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் கடைக்கு வந்து இருப்பது தெரியவந்தது.

இதன் மூலம் அந்த பெண் திட்டமிட்டு, செல்போன் கேமராவை பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் ஆன் செய்து வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உடைமாற்றும் பெண்களை வீடியோவாக பதிவுசெய்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் அந்த பெண் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story