செவிலியரின் பாலியல் புகாரை விசாரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை


செவிலியரின் பாலியல் புகாரை விசாரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை
x

செவிலியரின் பாலியல் புகாரை விசாரிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமப்புற மருத்துவ சேவை இயக்குனருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


செவிலியரின் பாலியல் புகாரை விசாரிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமப்புற மருத்துவ சேவை இயக்குனருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து செவிலியராக பணியாற்றினேன். அங்குள்ள வட்டார மருத்துவ அதிகாரி எனக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதுகுறித்து கடந்த 2017-ம் ஆண்டு சுகாதாரத்துறை இயக்குனரிடம் புகார் அளித்தேன். இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது வரை அந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கிடையே என்னை அங்கிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றினர். என்னை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கோர்ட்டு அதிர்ச்சி

இந்த வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் பணிக்கு ஒழுங்காக வராதது, நோயாளிகளிடம் கடுமையாக நடந்தது என்பன உள்ளிட்ட காரணங்களால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் வட்டார மருத்துவ அதிகாரி மீது வீண்பழி சுமத்துகிறார், என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு;-

வட்டார மருத்துவ அதிகாரி மணிகண்டன் மீது மனுதாரர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கண்டமனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டும் பலனில்லை. இது இந்த கோர்ட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

மனுதாரர் புகார் மீதான விசாரணை அறிக்கையை அதிகாரிகளிடம் இருந்து பெற பலமுறை முயற்சித்தும் முடியவில்லை என அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். பின்பு சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அதிகாரி மணிகண்டனை ஆஜராக உத்தரவிட்டும் அவர் தவிர்த்துவிட்டார். மனுதாரரின் புகார் சட்டப்படி கையாளப்படவில்லை. எனவே மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

பணியிடங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டப்படி மனுதாரரின் புகாரை முறையாக விசாரிக்கவில்லை என்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் எடுக்க வேண்டும். மனுதாரர் புகாரை முறையாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story