அரசு ஆஸ்பத்திரிகளில் இருதய சிகிச்சை பிரிவை தரம் உயர்த்தக்கோரி வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


அரசு ஆஸ்பத்திரிகளில் இருதய சிகிச்சை பிரிவை தரம் உயர்த்தக்கோரி வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

அரசு ஆஸ்பத்திரிகளில் இருதய சிகிச்சை பிரிவை தரம் உயர்த்தக்கோரி வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


மதுரையை சேர்ந்த வெரோணிகா மேரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது கணவர் ஆனந்தராஜுக்கு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது, இருதய சிகிச்சை பிரிவு டாக்டர் இல்லை என்றும், காலையில்தான் ஆபரேஷன் செய்ய முடியும். அவசரம் என்றால் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என தெரிவித்தனர். சிறந்த மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியைத்தான் தென் மாவட்ட மக்கள் நம்பியுள்ளனர்.

ஆனால், இதுபோல அவசர இருதய சிகிச்சை பெற டாக்டர்கள் 24 மணிநேரமும் மருத்துவமனையில் இருப்பதில்லை. எனவே மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம், தேனி அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ கருவிகள், உபகரணங்கள் வசதியை ஏற்படுத்தி தரம் உயர்த்தவும், 24 மணி நேரமும் இருதய ஆபரேஷன் செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அரசு ஆஸ்பத்திரி டீன் உள்ளிட்டவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


Next Story