நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடியில் உயர்மட்ட பாலம்
நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடியில் உயர்மட்ட பாலம்
திருப்பூர், ஜூலை.27-
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் ரூ.18 கோடியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
ரூ.18 கோடியில் உயர்மட்ட பாலம்
திருப்பூர் மாநகராட்சி 35 மற்றும் 44-வது வார்டுக்கு உட்பட்ட ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் ஆற்றின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்தும், உயரம் குறைவாக இருப்பதால் மழைக்காலங்களில் போக்குவரத்துக்கு தடைபட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு பழைய பாலத்தை அகற்றி விட்டு, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியில் புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாலப்பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த பாலம் 147.40 மீட்டர் நீளத்திலும், 20.54 மீட்டர் அகலத்திலும் இருவழிப்பாதையாகவும், 1.50 மீட்டர் நடைபாதை இருபுறமும் அமைய உள்ளது. 9 கண்வாய்கள் அமைய இருக்கிறது. மழைக்காலத்தில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் உயர்மட்ட பாலத்தில் செல்ல சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட உள்ளது. 18 மாதங்களில் பணியை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
8,681 தெருவிளக்குகள்
இதைத்தொடர்ந்து 41-வது வார்டு முருகம்பாளையம் தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள ஜம்மனை ஓடையின் குறுக்கே ரூ.2 கோடியே 86 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். முன்னதாக 1-வது மண்டலத்தில் 2 ஆயிரத்து 295 மின்விளக்குகள், 2-வது மண்டலத்தில் 1,847 மின்விளக்குகள், 3-வது மண்டலத்தில் 2 ஆயிரத்து 33 மின்விளக்குகள், 4-வது மண்டலத்தில் 2 ஆயிரத்து 222 மின்விளக்குகள் என மொத்தம் 8 ஆயிரத்து 681 மின்விளக்குகள் ரூ.17 கோடியே 51 லட்சம் மதிப்பில் பொருத்தும் பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.