அதிக அளவில் பட்டாசு உற்பத்தி;போதிய விலை கிடைக்குமா?


அதிக அளவில் பட்டாசு உற்பத்தி;போதிய விலை கிடைக்குமா?
x

சிவகாசியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் போதிய விலை கிடைக்குமா? என்ற அச்சம் உற்பத்தியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் போதிய விலை கிடைக்குமா? என்ற அச்சம் உற்பத்தியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

பட்டாசு உற்பத்தி

சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 800-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படும்.

இதற்கிடையில் வடமாநில மொத்த வியாபாரிகள் வழக்கம்போல் ஜூன், ஜூலை மாதங்களில் சிவகாசிக்கு வந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளுக்கு உரிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் செலுத்தி விட்டு ஆர்டர் கொடுத்து விட்டு செல்வது வழக்கம். ஆர்டர் பெறும் பட்டாசு ஆலை நிர்வாகம் சம்பந்தப்பட்ட மொத்த வியாபாரிக்கு தேவையான பட்டாசுகளை அடுத்து வரும் நாட்களில் அனுப்பி வைக்கும்.

விலை இல்லை

இந்தநிலையில் கடந்த 4 மாதங்களில் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் எவ்வித தடையும் இன்றி பெரும் அளவில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டது. வெளி மாநில வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து இங்குள்ள உற்பத்தியாளர்களிடம் குறைந்த விலைக்கு பட்டாசுகளை விலை பேசுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டை விட 30 சதவீதம் மூலப்பொருட்களை அதிகவிலை கொடுத்து வாங்கி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட ஆலை நிர்வாகிகளிடம், பட்டாசு மொத்த வியாபாரிகள் கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் விலை குறைத்து கேட்பதாக கூறப்படுகிறது.

பெரும் அதிா்ச்சி

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாமலும், புதிதாக உற்பத்தி செய்யாமலும் தவித்து வருகிறார்கள். இதனால் கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டு பட்டாசு தொழிலில் போதிய வருமானம் மற்றும் லாபம் இருக்காது என கூறப்படுகிறது.

இதுகுறித்து மொத்த வியாபாரி மாணிக்கம் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு எவ்வித தடையும் இன்றி பட்டாசுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் கேட்கும் தொகை கிடைப்பது சந்தேகம் தான்.

விலை குறைத்து கொடுக்கப்படும் இடங்களை தேடி மொத்த வியாபாரிகள் பட்டாசுகளை வாங்க முடிவு செய்து விட்டார்கள். இதனால் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தியாளர்கள் கேட்கும் விலை கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story