நீலகிரியில் 35 ஊராட்சிகளுக்கு அதிவேக இணைய வசதி


நீலகிரியில் 35 ஊராட்சிகளுக்கு அதிவேக இணைய வசதி
x
தினத்தந்தி 28 Aug 2023 10:30 PM GMT (Updated: 28 Aug 2023 10:30 PM GMT)

நீலகிரியில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் 35 ஊராட்சிகளுக்கும் அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது. இதற்காக கேபிள் பதிக்கும் பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் 35 ஊராட்சிகளுக்கும் அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது. இதற்காக கேபிள் பதிக்கும் பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பாரத் நெட் திட்டம்

நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதற்காக மத்திய அரசு பாரத் நெட் திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் 2-வது கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கப்பட உள்ளது.

அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவையை கொடுக்கவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே தகவல் தொழில்நுட்ப திறன் இடைவெளியை குறைப்பதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், தமிழகத்தில் ரூ.1,627 கோடியில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் சார்பில் பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

அதிவேக இணைய வசதி

பாரத்நெட் திட்டம் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும் 'கண்ணாடி இழை கம்பி வடம்' மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். இதன் மூலம் குறைந்தபட்சம் 1 ஜி.பி.பி.எஸ். அளவிலான அலைக்கற்றை அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கப்படும்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 35 ஊராட்சிகளில் 315 கி.மீ. தூரத்திற்கு இந்த திட்டம் நிறைவேற்றப்படும். ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொட்டபெட்டா உள்பட பல்வேறு ஊராட்சி பகுதிகளுக்கு கேபிள்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஊரக வேலைவாய்ப்புகள்

இதன் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு சேவைகள், இணையவழி கல்வி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிவேக இணையதள சேவையை பெறுவதன் மூலம் கிராம அளவில் அரசின் திட்டங்கள் மக்களை விரைவில் சென்றடையும். அத்துடன் புதிய ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார நிலை ேமம்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசின் உபகரணங்கள்

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 35 கிராம ஊராட்சிகளில் அதிவேக இணையதள வசதிக்காக 315 கி.மீ. தூரத்துக்கு கேபிள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2 மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இணையதள வசதிக்காக அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள் தரைவழியாகவும், மின் கம்பங்கள் மூலமாகவும் இணைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான உபகரணங்கள் கிராம ஊராட்சிகளில் சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கான அங்குள்ள உபகரணங்கள் உள்ள அறை சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் கிராம ஊராட்சிகளில் உள்ள சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் அமைக்கப்படும் மின்கலன், இன்வெட்டர், ரூட்டர், கண்ணாடி இழை ஆகிய உபகரணங்கள் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. எனவே, இவற்றை சேதப்படுத்துதல், திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story