மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி 8 ஒன்றியங்களில் நடக்கிறது.
வழிகாட்டல் பயிற்சி
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் பயிற்சிக்கான முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 8 கல்வி ஒன்றியங்களில் 66 பள்ளிகளிலிருந்து 1,163 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டலுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியானது, அந்தந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டார வள மையங்களிலோ, பள்ளிகளிலோ மாவட்ட ஆசிரியர் நிறுவன விரிவுரையாளர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
3-ந் தேதி வரை
இப்பயிற்சி 26-ந் தேதி ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 பள்ளிகளைச் சேர்ந்த 117 நபர்களுக்கும், 27-ந் தேதி அரக்கோணம் வட்டார வள மையத்தில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 220 நபர்களுக்கும், அதே நாளில் வாலாஜா மேற்கு ஒன்றியத்தில் பழைய கலெக்டர் அலுவலகத்தில் 6 பள்ளிகளைச் சேர்ந்த 96 நபர்களுக்கும், 28-ந் தேதி பழைய பனப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 197 நபர்களுக்கும், வாலாஜா கிழக்கு ஒன்றியத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5 பள்ளிகளைச் சேர்ந்த 108 நபர்களுக்கும் நடக்கிறது.
அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி திமிரி வட்டார வள மையத்தில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 197 நபர்களுக்கும், சோளிங்கர், ஜம்புகுளம் அரசு கலைக் கல்லூரியில் 7 பள்ளிகளைச் சேர்ந்த 132 நபர்களுக்கும், 3-ந் தேதி காவேரிப்பாக்கம் வட்டார வள மையத்தில் 6 பள்ளிகளைச் சேர்ந்த 96 நபர்களுக்கும் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






