பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி


பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
x

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் 150 அரசு பள்ளிகளை தத்தெடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

கோயம்புத்தூர்


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் 150 அரசு பள்ளிகளை தத்தெடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்னும் தலைப்பில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

தொடர்ந்து பாரதியார் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த 40 கல்லூரிகள் 150 அரசு பள்ளிகளை தத்தெடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அந்தந்த கல்லூரி நிர்வாகிகள், முதல்வர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் கலெக்டர் சமீரன் பேசும்போது கூறியதாவது:-

புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான இந்த திட்டத்தின் கீழ் போலாம் ரைட், 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி, அறிவியல் பொருட்காட்சி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று கலெக்டரும், அவர்களுடன் கலந்து கொண்டு உரையாடும் நிகழ்ச்சி இதுவரை 7 முறை நடந்து உள்ளது.

மேலும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற திட்டத்தை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோல் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்விகளுக்கு பதில்

தொடர்ந்து உயர்கல்வி, போட்டி தேர்வுகள் தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு கலெக்டர் பதிலளித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட முன்னணி வங்கிகள் சார்பில் அரங்குகளும் வைக்கப்பட்டு இருந்தன.

இதில் பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, விரிவாக்கம் மற்றும் வேலைவழிகாட்டித்துறை தலைவர் விமலா மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story