பயிருக்கு தேவையான உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம்


பயிருக்கு தேவையான உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம்
x

மண் பரிசோதனை செய்து பயிருக்கு தேவையான உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

மண் பரிசோதனை செய்து பயிருக்கு தேவையான உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறுவை சாகுபடி

நாகை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் 20 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பயிர் வளர்ச்சிக்கு தேவையான மண் வளமும், நீர் வளமும் தேவையான அளவு இயற்கையாகவே இருப்பினும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துவதால், மண்ணின் வளம் பாதிக்கப்படுவதோடு விளைப்பொருட்களின் தரமும் பாதிக்கப்படுகிறது.

ரசாயன உரங்களை அதிகளவு பயன்படுத்துவதால், தழைச்சத்து அதிகமாகி பூச்சி நோய் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டு பயிர் அறுவடை செய்யும்போது, பயிர் சாயும் நிலை ஏற்படுகிறது. எனவே மண் வளத்தை சீர் செய்ய வேண்டும். பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாக்க மண் பரிசோதனை மிகவும் அவசியமானதாகும்.

மண் பரிசோதனை

மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு நிலத்திற்கு, நிலம் மாறுபடுவதாலும், பயிர் ரகங்களுக்கு தேவையான சத்துக்களின் அளவும் ரகத்திற்கு ஏற்ப வேறுபடுவதாலும் மண் பரிசோதனை செய்து அதில் உள்ள சத்துக்களுக்கு ஏற்றவாறு உரம் இட வேண்டும். இதனால் உரச் செலவை குறைத்து கூடுதல் மகசூல் பெற முடியும்.

மண்வள அட்டையில் விவசாயிகளின் மண்ணின் நயம், கார அமிலத்தன்மை, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் நுண்சத்துக்களின் அளவு தெளிவாக குறிப்பிடப்படுகிறது.

மகசூல் அதிகரிக்கும்

மேலும் விவசாயிகள் தங்கள் மண்ணிக்கு இட வேண்டிய உரங்களின் விவரங்கள் சாகுபடி செய்ய வேண்டிய பயிர்களின் விவரங்களும் அதில் அளிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்திலுள்ள சத்துக்களின் அடிப்படையில் மேலாண்மை செய்வதால், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதுடன், மகசூல் அதிகரித்து வருவாயும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story