எச்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பால பணி அடுத்த மாதம் தொடங்கும்
சிங்காநல்லூரில் உள்ள எச்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பால பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்காநல்லூரில் உள்ள எச்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பால பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பாலம்
கோவை -திருச்சி சாலையில் சிங்காநல்லூர் அருகே இடதுபுறம் பிரிந்து ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி வழியாக கோவை விமான நிலையம் செல்கிறது. இந்த சாலை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மட்டுமல்லாமல் நேதாஜி நகர், சக்தி நகர், காவேரி நகர், ராமசாமி நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருக்கிறது.
இந்த ரோட்டில் தண்டவாளம் குறுக்கிடுகிறது. இதனால் ரெயில்கள் வரும்போது அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இங்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
பணிகள் நிறுத்தம்
இதற்காக ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி 70 சதவீதம் முடிக்கப்பட்டன. ஆனால் மேம்பாலத்தின் இருபுறத்திலும் சேவை சாலை அமைக்காமல் மேம்பால பணிகள் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு ஏற்பட்டதால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் மேம்பால பணிகள் நிறுத்தப் பட்டன. பல மாதங்களாக பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. மேலும் கோர்ட்டில் வழக்கை முடித்து விரைவில் பணிகளை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வீடுகளை இடிக்கும் பணி
இதையடுத்து அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளது. அத்து டன் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதியில் இடிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இதனால் வீட்டின் உரிமையாளர்களே இடிக்கப்பட உள்ள வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே விரைவில் மேம்பால பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரூ.55½ கோடி ஒதுக்கீடு
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பாலம் தொடர்பாக கோர்ட்டில் 6 வழக்குகள் போடப்பட்டு இருந்தன.
தற்போது அந்த வழக்குகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. எனவே நிலம் கையகப்படுத் துவது, மேம்பாலத்தை அமைப்பது, சேவை (சர்வீஸ்) சாலை அமைப்பது ஆகியவற்றுக்காக மொத்தம் ரூ.55 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.29.37 கோடி நிலம் கையகப்படுத்துவதற்காக ஆகும்.
நோட்டீஸ்
இதில் சேவை சாலை அமைக்க 11 வீடுகளும், 6 வீடுகளின் சுற்றுச் சுவரும் இடிக்கப்பட வேண்டும். அதை இடிக்க நோட்டீஸ் வழங் கப்பட்டு இருக்கிறது.
இங்கு பணிகள் தொடங்க அரசிடம் இருந்து விரைவில் உத்தரவு வந்துவிடும்.இந்த மேம்பாலம் 750 மீட்டர் தூரம் கொண்டது.
இந்த மேம் பாலத்தின் இருபுறத்திலும் 600 மீட்டர் தூரத்துக்கு, 3¾ மீட்டர் அகலத்துக்கு சேவை சாலை அமைக்க வேண்டும்.
எனவே அடுத்த மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட் டுக்கு திறக்கப்படும்.








