நொய்யலை மீட்க விரைவில் நடைபயணம்


நொய்யலை மீட்க விரைவில் நடைபயணம்
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நீர்மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்றும், நொய்யலை மீட்க விரைவில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்றும் கோவையில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை

தமிழகத்தில் நீர்மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்றும், நொய்யலை மீட்க விரைவில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்றும் கோவையில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

நொய்யலை மீட்போம் கருத்தரங்கு

பசுமை தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற கருத்தரங்கு கோவை பீளமேட்டில் நடந்தது. அசோக் ஸ்ரீநிதி வரவேற்றார். இதில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், பன்னாட்டு வேளாண்மை மற்றும் நீரியல் வல்லுனர் கே.பழனிசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, பசுமை தாயக செயலாளர் அருள், அரிமா சங்க மாவட்ட ஆளுனர் ராம்குமார் மற்றும் செந்தூர் பாரி ஆகியோர் பேசினார்கள்.

இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு நொய்யல் மீளட்டும், கொங்கு செழிக்கட்டும் என்ற லோகாவை வெளியிட்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

180 கி.மீ. தூரம்

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக 180 கி.மீ. தூரம் பயணித்து நொய்யல் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் 32 தடுப்பணைகளும், 40-க்கும் மேற்பட்ட குளங்களும் பாசனம் பெற்று வருகிறது.

சிறந்த நீர்மேலாண்மை திட்டத்துக்கு வழிவகுத்த இந்த ஆற்றில் சாயக்கழிவு, தொழிற்சாலை கழிவு, திடக்கழிவு உள்பட தினமும் 8.7 கோடி லிட்டர் கழிவுகள் கலப்பால் தற்போது மாசு அடைந்து மிக மோசமான சூழலில் உள்ளது. இதை மீட்டெடுக்க பசுமை தாயகம் சார்பில் முயற்சி எடுத்துள்ளோம்.

நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும்

எனவே மத்திய-மாநில அரசுகள் இணைந்து நொய்யல் ஆற்றை காப்பாற்ற வேண்டும். அத்துடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக தலையிட்டு, இந்த ஆற்றை மீட்க அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான தலைவர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டும்.

மாசடைந்த நொய்யல் ஆற்றை மீட்பதுடன் தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள நீர்மேலாண்மை திட்டங்களை நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்காக வங்கியில் கடன் வாங்கியாவது நேர்மையானவர்களை தலைவராக நியமித்து அதை செலவு செய்ய வேண்டும்.

நடைபயணம்

மேலும் நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் என்று அடுத்த ஒரு மாதத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இதற்காக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து அடுத்தக்கட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அத்துடன் இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என்பதுதான் எங்களின் நோக்கமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.இதில் திருப்பூர் ரவி, சேக் மெய்தீன், ராமசுந்தரம், பார்த்தசாரதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story