மலை கிராம மக்கள் மறியல்
ஓமலூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி மலை கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்:-
ஓமலூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரிமலை கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குண்டும், குழியுமான சாலை
ஓமலூரை அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கன்னப்பாடி, கோவில்பாடி, பூமரத்தூர், தோப்புக்காடு, தாலூர்காடு உள்ளிட்ட 8 கிராமங்களும், ஏற்காடு ஒன்றியம் நாகலூர் ஊராட்சி சொரக்காப்பட்டி செட்டியாபட்டி, கொளக்கூர், நாகலூர் உள்ளிட்ட 12 மலை கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களில் மலைவாழ் மக்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.
கணவாய்புதூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து கன்னப்பாடி காவேரிகாடு ஏற்காடு ஒன்றிய எல்லை வரை 7 கிலோமீட்டர் தூரம் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், மருத்துவமனைகளுக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாயினர்.
சாலைமறியல்
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மலைகிராம மக்கள், தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பினர் அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர். அப்படி இருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள், தமிழக ஆதிவாசி கூட்டமைப்பு முன்னாள் தலைவர் கணேசன் தலைமையில் கணவாய்புதூர் பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தன், திரம்மன், சீனிவாசன், சின்னதம்பி உள்பட மலை கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
தகவல் அறிந்த காடையாம்பட்டி தாசில்தார் தமிழரசி, ஒன்றிய ஆணையாளர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படும் என எழுதி கொடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மலை கிராம மக்கள் கூறினர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் தமிழரசி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஓரிரு நாளில் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றார். இந்த சாலைமறியல் போராட்டத்தால் தீவட்டிப்பட்டி- பொம்மிடி ரோட்டில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.