டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து, முஸ்லிம் அமைப்பினர் போராட்டம்
மண்டபத்தில் பொதுமக்கள் குடியிருப்பு உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் அடுத்தடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனைக்குளம்,
மண்டபத்தில் பொதுமக்கள் குடியிருப்பு உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் அடுத்தடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடை
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்த நொச்சி ஊருணி அருகே டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நொச்சி ஊருணி அருகே செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் மதுக்கடையை மண்டபத்தில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக மண்டபம் ரெயில்வே நிலையம் செல்லும் முக்கிய பஜார் சாலை பகுதியில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இடம் ஒன்றை தேர்வு செய்துள்ளது. அங்கு டாஸ்மாக் கடையை நேற்று திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
மண்டபத்தில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள முக்கிய பகுதி மற்றும் வீடுகள் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை இந்து முன்னணி, பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடப்பட்டுள்ள அந்த கடை அருகே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மண்டபத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
இதேபோல் நேற்று மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் மண்டபம் பகுதியில் குடியிருப்புகள் உள்ள இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் மண்டபத்தில் அடுத்தடுத்த போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ராமேசுவரம் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் மண்டபம் போலீஸ்இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி உள்ளிட்ட ஏராளமான போலீசார் மண்டபம் பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இதே பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை ்பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் இதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது மண்டபத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் மத்தியிலும் மிகுந்த ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.