இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் கைது
நெல்லையில் இடப்பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில் இடப்பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தி.மு.க. கவுன்சிலர்
நெல்லையை அடுத்த பேட்டையை சேர்ந்தவர் ஷேக் மன்சூர் (வயது 42). இவர் நெல்லை மாநகராட்சியில் 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் இந்து முன்னணி பேட்டை நகர துணைத்தலைவராக உள்ளார். பேட்டை செக்கடி பகுதியில் சிமெண்டு கடையும் நடத்தி வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே செக்கடி பகுதியில் உள்ள ஒரு இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திடீர் தாக்குதல்
நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக டவுன் காட்சி மண்டபம் அருகே இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பன் சரமாரியாக தாக்கப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டரும் தாக்கப்பட்டார்
அப்போது அந்த வழியாக பேட்டை போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்லத்துரை இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் இந்த சம்பவத்தை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயற்சி செய்தார்.
அப்போது அவரும் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. மேலும் அய்யப்பனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை கண்டதும் கவுன்சிலர் தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதையடுத்து காயம் அடைந்திருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, இந்து முன்னணி நிர்வாகி அய்யப்பன் ஆகியோரை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இதுதொடர்பாக அய்யப்பன் அளித்த புகாரின் பேரில், தி.மு.க. கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் மோதல் சம்பவத்தை தடுக்க சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது 3 பிரிவுகளில் மற்றொரு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கவுன்சிலர் ஷேக் மன்சூர், அவரது ஆதரவாளரான கனி ஆகியோரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.