இந்து காட்டுநாயக்கன் பழங்குடியினர் சாதி சான்று விவகாரம்:திருச்செந்தூர் உதவி கலெக்டர் விளக்கம்
இந்து காட்டுநாயக்கன் பழங்குடியினர் சாதி சான்று விவகாரம் குறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மனைவி சரசுவதி என்பவர், தனது குழந்தைகள் பூவலிங்கம், முத்துசெல்வி ஆகியோருக்கு இந்து காட்டு நாயக்கன் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்து இருந்தார். மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கொடிவழி ஜாபிதா மற்றும் நேரடி விசாரணையில் குருசாமி - காளியம்மாள் தம்பதிகளின் வாரிசுகள் குறித்து மனுதாரர் மற்றும் அவரது தரப்பில் விசாரணையில் ஆஜரான நபர்களால் தெளிவுப்படுத்தப்படவில்லை என்பதாலும், மனுதாரர் குடி நிலவரம் பற்றிய நிலை, குலமரபு, பேச்சுவழக்கு, இறைவழிபாடு, அறிவார்ந்த செயல், பாரம்பரிய கட்டுப்பாட்டு முறை, உறவினர்களின் நிலை குறித்து ஆய்வு செய்த போது மனுதாரர் பழங்குடியினத்தவரான இந்து காட்டுநாயக்கன் சாதியைச் சார்ந்தவர் என்பதற்கான எவ்வித அடையாளங்களும் இல்லை. இதனால் மனுதாரர் சரசுவதியின் குழந்தைகளான பூவலிங்கம், முத்துசெல்வி ஆகியோருக்கு பழங்குடியினர் சாதிச் சான்றான இந்து காட்டுநாயக்கன் சாதிச்சான்று வழங்க வழியில்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.