வீட்டில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த இந்து முன்னணி பிரமுகர் கைது


வீட்டில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த இந்து முன்னணி பிரமுகர் கைது
x

வீட்டில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் சோதனை

இந்து முன்னணி கோவை மாவட்ட துணைத்தலைவராக இருப்பவர் அயோத்தி ரவி. கோவை புலியகுளத்தில் உள்ள போலீஸ் நிலையம் அருகே இருக்கும் அவரது வீட்டில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து துணை கமிஷனர் சந்தீஷ் தலைமையில் போலீசார் அயோத்தி ரவி வீட்டுக்கு நேற்று சென்றனர். பின்னர் அவருடைய வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அயோத்தி ரவி வீட்டில்தான் இருந்தார்.

துப்பாக்கிகள் பறிமுதல்

வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அவருடைய வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் (பிஸ்டல் ரகம்), 5 தோட்டாக்கள் ஆகியவை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அயோத்தி ரவியை போலீசார் பிடித்து போத்தனூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். அவரிடம் இந்த துப்பாக்கிகளை எங்கிருந்து வாங்கியது? வாங்கி கொடுத்தது யார்? இதில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ள என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

15 தோட்டாக்கள் எங்கே?

கைது செய்யப்பட்ட அயோத்தி ரவி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 துப்பாக்கிகளில் தலா 10 தோட்டாக்கள் என்று 20 தோட்டாக்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவரிடம் 5 தோட்டாக்கள் மட்டுமே இருந்தன. எனவே மீதுமுள்ள 15 தோட்டாக்கள் எங்கே?, அவற்றை அவர் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிகளை அவர் நண்பர்கள் மூலம் சென்னையில் வாங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. எனவே ரவுடி கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story