சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் போராட்டம்


சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் போராட்டம்
x

சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணியினர் நேற்று காலையில் சாலைமறியலில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக அங்கு சாலையோரம் இந்து முன்னணியினர் திரண்டனர்.

அவர்களை கைது செய்வதற்காக சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் தலைமையிலான போலீசாரும் தயார் நிலையில் இருந்தனர். இதற்கிடையே, மாநில நிர்வாகி வருகைக்காக இந்து முன்னணியினர் காத்திருந்தனர்.

அப்போது இந்து முன்னணியினரில் ஒருவரை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து அழைத்து சென்று வேனில் ஏற்றினர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஆறுமுகசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், நகர தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் மாலையில் அந்த மண்டபத்தின் முன்பாக சாலைமறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், ஆறுமுகச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்து, அதே மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் 26 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து வி.பி.ஜெயக்குமார் கூறுகையில், ''போலீசாரின் அத்துமீறலால் இந்து முன்னணியினர் 3 பேர் காயமடைந்துள்ளனர். எனவே போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.


Next Story