அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி
ஆரணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கோட்ட தலைவர் மகேஷ் கலந்து கொண்டார். அவர் வருவதற்கு முன்பு பஸ் நிலைய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என கூறினர்.
அதற்கு இந்து முன்னணி அமைப்பினர் 5 நிமிடத்தில் முடித்து விடுகிறோம் என பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென சிலர் உதயநிதி ஸ்டாலின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி கொண்டு வந்தனர்.
தீக்குளிக்க முயற்சி
இதனையறிந்த ஆரணி டவுன் போலீசார் உடனடியாக உருவ பொம்மையை அவர்களிடம் இருந்து பிடுங்கிச்சென்றனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் கிளைச் செயலாளர் கணேசன் என்பவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது எனது மனதை வருத்துகிறது. நான் தீக்குளிக்கிறேன் என கூறி மண்எண்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டார்.
அப்போது அருகில் இருந்த போலீசார் மண்எண்ணெய் பாட்டிலையும், அவர் தீப்பற்ற வைத்திருந்த தீப்பெட்டியையும் பறித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
62 பேர் கைது
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நகர தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் லோகு, மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து 2 பெண்கள் உள்பட 62 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.