இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
கோவை
கோவையில் பா.ஜனதா அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மற்றும் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி(தமிழகம்) சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷம் எழுப்பியதுடன், ஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அதை தடுத்து உருவபொம்மையை போலீசார் பறித்தனர். இதற்கிடையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மின்கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பியதுடன், டி.வி.க்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாநில செயலாளர் சங்கர், மாநில வர்த்தக அணி தலைவர் மாணிக்கம், பொதுச்செயலாளர் சந்தோஷ், மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, மாநில துணைத்தலைவர் முத்து அரங்கசாமி, சுப்பிரமணி, மாதேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுபோன்று சிவசேனா சார்பில் சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொங்குமண்டல தலைவர் செந்தில் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோஷம் எழுப்பினார்கள்.