திருவண்ணாமலையில் இந்து அமைப்பினர் 2-வது நாளாக போராட்டம்


திருவண்ணாமலையில் இந்து அமைப்பினர் 2-வது நாளாக போராட்டம்
x

திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடம் இடிப்பை கண்டித்து இந்து அமைப்பினர் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலைதிருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடம் இடிப்பை கண்டித்து இந்து அமைப்பினர் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்மணி அம்மன் மடம் இடிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்கு கோபுர அருகில் உள்ள அம்மணி அம்மன் மடத்தை பா.ஜ.க.வை சேர்ந்த சங்கர் என்பவர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் மாடி வீடும், கார் ஷெட் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அந்த மடத்தை அவரிடம் இருந்து மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கார் ஷெட் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கோவில் நிர்வாக அறிவுறுத்தலின் பேரில் அம்மணி அம்மன் மடமும் இடிக்கும் பணி நடந்தது. மடத்தின் முகப்பு பகுதி பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டத்தை அறிந்த இந்து அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மடம் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்து அமைப்பினர் போராட்டம்

தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் மடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. தகவலறிந்த இந்து அமைப்பினர் அங்கு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மடம் இடிக்கும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் அம்மணி அம்மன் கோபுர வீதியில் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் மற்றும் இந்து அமைப்பினர் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து மடம் இடிக்கப்பட்ட இடத்தின் அருகில் கற்பூரம் ஏற்றி ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலுக்குள் அதிகாரிகளை சந்திக்க சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் கலைந்து சென்றனர்.

பா.ஜ.க. நிர்வாகி போராட்டம்

இந்த போராட்டம் ஒருபுறம் நடைபெற அம்மணி அம்மன் மடத்தை ஆக்கிரமித்ததாக கூறப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி சங்கர் அவரது ஆதரவாளர்களுடன் பாதி இடிக்கப்பட்ட அந்த மடத்தின் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மணி அம்மன் மடம் என்பது கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது அல்ல. இது அறக்கட்டளை தான். இந்த அறக்கட்டளைக்கு தேவையான உதவிகளை கோவில் நிர்வாகம் செய்ய தான் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. நான் மடத்தின் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி இடித்தனர். அதை நான் நீதிமன்றம் மூலம் எதிர் கொண்டு அதற்கான நஷ்டஈடு பெறுவேன்.

பழைய, புராதன கட்டிடங்களை இடிப்பதற்கு முன்பு பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதனை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல் அம்மணி அம்மன் மடத்தை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் இந்த பணி நடைபெற்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்மணி அம்மன் மடம் இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினரும், பா.ஜ.க. நிர்வாகி மற்றும் அவரது ஆதரவர்களின் போராட்டத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story