பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு
டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு
பண்ருட்டி
பண்ருட்டி-அரசூர் சாலையில் உள்ள மணி நகரில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் தாங்கள் கொண்டுவரும் இருசக்கர வாகனங்களை ரோடு அருகாமையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும் நடு ரோட்டில் கூட்டமாக நின்று கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவ-மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பண்ருட்டி தாசில்தாரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் மாவட்ட தலைவர் தேவா, பொதுச்செயலாளர் சக்திவேல், அமைப்பு பொது செயலாளர் ஜம்புலிங்கம், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செல்வகுமார், இந்து திருக்கோவில் சொத்து பாதுகாப்பு அணி பிரிவின் மாவட்ட தலைவர் நாகராஜ்,பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் லட்சுமணன், மாவட்ட இளைஞரணி தலைவர் தமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.