இந்து மத அடையாளங்களை மறைக்க முயற்சிப்பது சரி அல்ல


இந்து மத அடையாளங்களை   மறைக்க முயற்சிப்பது சரி அல்ல
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்து மத அடையாளங்களை மறைக்க முயற்சி செய்வது சரி அல்ல என்று கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கோயம்புத்தூர்

இந்து மத அடையாளங்களை மறைக்க முயற்சி செய்வது சரி அல்ல என்று கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மின் ஊழியர்கள் போராட்டம்

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங் கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மாநில மின் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தனியார்மயமாக்கல் என்றதும், மின்துறையை முழுவதுமாக கொடுத்து விடுவதாக சிலர் நினைக்கின்றனர். அப்படி எதுவும் இல்லை.

பல துணை நிலை மாநிலங்களில் மின் துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு மின்கட்டணம் குறைக்கப்படும். இதனால் மின் ஊழியர்கள், அதிகாரிகள் பணி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு சாராருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு எண்ணம் கிடையாது.

ராஜராஜசோழன்

மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு தான் இது. இது தொடர்பான முடிவுகள், முதல்-அமைச்சருடன் பேசித்தான் எடுக்கப்படுகிறது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னது கூட பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற் காக தான். இதை ஊழியர், அதிகாரிகள் புரிந்துகொண்டு இருப்பார்கள்.

அப்போது ராஜராஜ சோழன் குறித்து டைரக்டர் வெற்றிமாறன் சொன்ன கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்து நிருபர்கள் கேட்ட போது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான். இதில் உள்ள அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாசார அடையாளங்கள் மறைக்கப்பட்டால் எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். ஏற்கனவே பல அடையாளங்கள் மறைக்கப் பட்டு இருக்கிறது. இந்து கலாசார அடையாளத்தை தேவைக்காக மாற்றிக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும், வைணவ மும் இந்து மதத்தின் அடையாளம் தான். இந்து அடையாளத்தை மறைக்க முற்படுகின்றனர். அது சரியாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story