கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே இந்து அறநிலையத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை
கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே இந்து அறநிலையத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கங்காணி பட்டியில் 12 கிராமங்களுக்கு சொந்தமான கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் பெரம்பலூர் இந்து அறநிலைத்துறை உதவி ஆணையரை சந்தித்து இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும்படி அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, துறையூரில் அறநிலையத்துறை உதவி இணை ஆணையர் அரவிந்தன் தலைமையில் இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பினர் தங்களுக்கு 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் எனவும் மற்றொரு தரப்பினர் வருகிற 3-ந் தேதி திருவிழா நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினர். இருதரப்பினரும் சமரசம் ஏற்படாததால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை இருப்பதாக முசிறி உதவி கலெக்டர் மாதவனிடம் இந்து அறநிலையத்துறை அதிகாரி கூறினார். இந்தநிலையில் இருதரப்பு இடையே விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று (வியாழக்கிழமை) திருவிழா நடத்து வது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கிராம பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.