ஏரியில் துணி துவைக்கும் கல்லில் வரலாற்று குறியீடுகள்
ஏரியில் துணி துவைக்கும் கல்லில் வரலாற்று குறியீடுகள் உள்ளன.
தா.பழூர்:
குத்துவிளக்கு போன்ற குறியீடு
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையில் துணி துவைப்பதற்காக ஒரு கல் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கல்லில் சில குறியீடுகள் உள்ளன. அதாவது அந்த கல்லின் ஒரு பகுதியில் குத்துவிளக்கு போன்ற ஒரு குறியீடும், அதன் அருகில் மற்றொரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த கல்லின் பின்பகுதியில் ஏதோ ஒரு குறியீடு செதுக்கப்பட்டிருந்தது போன்றும், ஆனால் சரியாக புலப்படாத வகையிலும் உள்ளது.
இந்நிலையில் அணைக்குடம் கிராமம் மன்னர்கள் ஆண்ட காலத்தில் படை பிரிவை சேர்ந்த யானைகளை பராமரிப்பதற்கான கிராமமாக இருந்தது. இதனால் ஆனைக்கூடம் என்ற பெயருடன் விளங்கியது. பிற்காலத்தில் அந்த பெயர் மருவி அணைக்குடம் என்று தற்போது அழைக்கப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் கூறுகின்றனர்.
யானைகள் பராமரிக்கப்படும் இடம்
மேலும் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தபோது குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட அமைப்புகள் அணைக்குடம் கிராமம் அருகில் உள்ள சோழமாதேவி கிராமத்தில் தற்போதும் உள்ளன. எனவே அணைக்குடம் கிராமம் சோழர்கள் காலத்தில் யானைகள் பராமரிக்கப்படும் இடமாகவும், அந்த கால அரசுகளோடு தொடர்பில் இருந்த கிராமமாக அல்லது நகரமாக இருந்திருக்கலாம் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் ஏரிக்கரையில் வரலாற்று குறியீடுகளுடன் உள்ள கல் குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
சங்க காலம் முதலே கற்களில் குறியீடுகள் பொறித்து வரலாறுகளை பதிவு செய்யும் முறையை தமிழர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முற்கால சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், பிற்கால சோழர்கள், நாயக்கர்கள் காலம் வரை எந்த ஆட்சிக் காலத்திலும் அந்த கல்லில் குறியீடுகள் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
ஆய்வு செய்ய வேண்டும்
நேரடியாக அரசர்களோடு தொடர்புடைய அடையாள கல்லாக இல்லையென்றாலும், மன்னர்கள் காலத்தில் கோவில்களுக்கு நிலங்களை நிவந்தம் அளித்த வணிகர்கள், அமைச்சர்கள், பிரபுக்கள், நிலச்சுவாந்தார்கள் உள்ளிட்டவர்களில் ஒருவருடைய அடையாள கல்லாகவும் இந்த கல் இருக்கலாம். எனவே அந்த கல்லில் உள்ள குறியீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டால், இப்பகுதியில் பல்வேறு வரலாற்று சுவடுகளை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த கல்லை பொக்கிஷமாக கருதி பத்திரப்படுத்த வேண்டும், அதில் உள்ள குறியீடுகள் குறித்து வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் துறையினரும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.