போலீசாரை தாக்கி ஜீப் கண்ணாடி உடைப்பு


போலீசாரை தாக்கி ஜீப் கண்ணாடி உடைப்பு
x

கோவையில் போலீசாரை தாக்கி ஜீப் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிய பூ வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

இடிகரை

கோவையில் போலீசாரை தாக்கி ஜீப் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிய பூ வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பாரில் தகராறு

கோவை சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர்.ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு வந்த 4 பேர் மது வாங்கி பாரில் குடித்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள பாரை விட்டு வெளியே செல்லாமல் இருந்தனர். இதனால் பார் ஊழியர்களுக்கும், அந்த 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே இது குறித்து ஊழியர்கள் சாய்பாபாகாலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு 2 போலீசார் ஜீப்பில் சென்றனர். அங்கு சென்றதும் அந்த பாரில் தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் எச்சரித்ததுடன், பாரை உடனடியாக மூடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அந்த 4 பேரும் 2 இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்.

போலீசார் மீது தாக்குதல்

பின்னர் அவர்கள் திடீரென்று போலீசார் சென்ற ஜீப்பை வழிமறித்து நிறுத்தினார்கள். அப்போது குடிபோதையில் இருந்த 4 பேரையும் போலீசார் எச்சரித்ததுடன், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு செல்லும்படி கூறினார்கள். ஆனால் அவர்கள் திடீரென்று அந்த ஜீப்பில் இருந்த 2 போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கினார்கள்.

மேலும் அவர்கள் தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து அவர்களை குத்தவும் முயற்சி செய்தனர். தொடர்ந்து அந்த பீர்பாட்டிலால் போலீசாரின் ஜீப் கண்ணாடியை உடைத்தனர். இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

2 பேர் கைது

இது குறித்து போலீசார், கொலை முயற்சி, தகாத வார்த்தைகளால் திட்டுதல், அரசு சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் சாய்பாபாகாலனி அண்ணாநகரை சேர்ந்த பூ வியாபாரி ஷேக் இஸ்மாயில் (வயது 27) மற்றும் அவருடைய நண்பர்கள் விஸ்வா (25), பரத் (24), விக்னேஷ் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஷேக் இஸ்மாயில், விஸ்வா ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான பரத், விக்னேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். குடிபோதையில் போலீசாரை தாக்கி ஜீப் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story