கண்டக்டர்களை தாக்கி பஸ் கண்ணாடி உடைப்பு


கண்டக்டர்களை தாக்கி பஸ் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:45 PM GMT)

குறிஞ்சிப்பாடி அருகே கண்டக்டர்களை தாக்கி பஸ் கண்ணாடியை உடைத்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி

கடலூரில் இருந்து பயணிகளுடன் விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சை தனவேல் என்பவர் ஓட்டினார். கண்டக்டர்களாக அன்பரசன்(வயது 30), சூர்யா(25) ஆகியோர் பணியில் இருந்தனர். பஸ்சில் பயணம் செய்த வடலூர் ஆர்.சி. காலனியை சேர்ந்த 5 வாலிபர்கள் பஸ்சில் கேலி, கிண்டல் செய்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைபார்த்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் அந்த வாலிபர்களை அமைதியாக வருமாறு அறிவுரை கூறி தட்டிக்கேட்டதோடு, அவர்களை குள்ளஞ்சாவடி போலீசில் ஒப்படைப்பதற்காக பஸ்சை நிறுத்தினர். அந்த சமயத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய 5 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து அந்த பஸ் விருத்தாசலம் சென்று விட்டு கடலூர் நோக்கி திரும்பி வந்த கொண்டிருந்தது. குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டை ரெயிலடி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, தப்பியோடிய வாலிபர்கள் 5 பேரும் பஸ்சை வழிமறித்து கண்டக்டர்களான அன்பரசன், சூர்யா ஆகியோரை தாக்கி, பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வடலூர் ஆர்.சி.காலனியை சேர்ந்த பிலோலிசன் (22), ஹரிஷ் (26), அப்பு (23), வினோத் (22), கார்த்திக்ராஜா (21) ஆகியோர் கண்டக்டர்களை தாக்கி, பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்த கண்டக்டர்கள் 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story