புனித வனத்துச்சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றம்
வால்பாறை அருகே அய்யர்பாடியில் புனித வனத்துச்சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வால்பாறை,
வால்பாறை அருகே அய்யர்பாடியில் புனித வனத்துச்சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கூட்டு பாடல் திருப்பலி
வால்பாறை அருகே அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் புனித வனத்துச்சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நடப்பு ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணிக்கு பங்கு தந்தைகள் ஆனந்தகுமார், கிறிஸ்டோபர் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தேர்த்திருவிழா கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு, மந்தரித்து ஏற்றி வைக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு வருகிற 17-ந் தேதி மாலை 6 மணிக்கு முடிஸ் புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை மரிய அந்தோணிசாமி தலைமையில் கூட்டு பாடல் திருப்பலியும், நவநாள் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. தொடர்ந்து புனித வனத்துச்சின்னப்பர், அன்னை வேளாங்கண்ணி மாதா, புனித செபஸ்தியார் சொரூபங்கள் மந்தரித்து வழங்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
நற்கருணை ஆசீர்
18-ந் தேதி காலை 9.30 மணிக்கு சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஜார்ஜ் சகாயராஜ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றி, புனித வனத்துச்சின்னப்பர் நவநாள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து மாலையில் எஸ்டேட் பகுதிகளில் இருந்து புனித வனத்துச்சின்னப்பர், வேளாங்கண்ணி மாதா, புனித அந்தோணியார், புனித செபஸ்தியார் சொரூபங்களுடன் தேர்பவனி நடைபெறுகிறது.
19-ந் தேதி தேதி திருப்பூர் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி குரு அன்ரூ தலைமையில் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலியும், ஆலயத்தை சுற்றி புனித செபஸ்தியார் அம்பு நேர்ச்சையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி வட்டார முதன்மை குரு ஜேக்கப் தலைமையில் புனித வனத்துச்சின்னப்பர் தேர்த்திருவிழா நன்றி திருப்பலியும், திவ்விய நற்கருணை ஆசீர் வழிபாடும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆனந்த குமார் தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.