கரும்பு தோட்டத்திற்குள் 26 மூட்டை புகையிலை பொருட்கள் பதுக்கல்: தந்தை-மகன் கைது
திருக்கோவிலூர் அருகே கரும்பு தோட்டத்துக்குள் 26 மூட்டைகளில் புகையிலை பொருட்களை பதுக்கிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே கொரக்கந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ராஜசேகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 26 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவைகளை பிரித்து பார்க்கையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
தந்தை மகன் கைது
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், கொரக்கந்தாங்கல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் செல்வம் (வயது 47), அவரது மகன் கிரண்குமார் (22) ஆகியோர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும்,
26 மூட்டைகளில் இருந்த 236 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல்செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
மேலும் புகையிலை பொருட்களை எங்கிருந்து கடத்தி வந்தார்கள்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கரும்பு தோட்டத்துக்குள் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.