ஆக்கி போட்டி; அன்னை தெரசா பல்கலைக்கழக அணி சாம்பியன்
கொடைக்கானல் கோடைவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஆக்கி போட்டியில் அன்னை தெரசா பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கொடைக்கானல் கோடை விழாவையொட்டி பெண்களுக்கான மாவட்ட அளவிலான ஐவர் ஆக்கி போட்டி நடந்தது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. இதில், 8 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள் நாக் அவுட் சுற்று அடிப்படையில் நடந்தது. இறுதிப்போட்டியில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் அணியும், என்.பஞ்சம்பட்டி தன்ராஜ் பிள்ளை அணியும் மோதிது.
இதில் 3-0 என்ற புள்ளி கணக்கில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. அந்த அணிக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இதனை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சுதா வழங்கினார். பின்னர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா, பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், துணைவேந்தர் கலா, பதிவாளர் ஷீலா, உடற்கல்வி இயக்குனர் ராஜம், பயிற்சியாளர் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஆக்கி போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளை பாராட்டினர்.