தொடர் விடுமுறை:வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறை:வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 14 Aug 2023 1:00 AM IST (Updated: 14 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

தொடர் விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

வால்பாறையில் சுற்றுலா பயணிகள்

வால்பாறையில் தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பொய்த்து வருகிறது. அவ்வப்போது மட்டும் லேசான மழையும் கனமழையும் பெய்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்பநிலை நிலவும் என்று வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே நிலை தான் கேரளா, கர்நாடக மாநிலத்திலும் காலசூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வரத் தொடங்கி உள்ளனர். இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் விடுமுறை எடுத்தால் அடுத்த நாள் செவ்வாய் கிழமை சுதந்திர தினவிழா அரசு விடுமுறை என்பதால் அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக் கூடியவர்கள் வால்பாறைக்கு வந்து குவிந்து வருகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

நேற்று வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கூழாங்கல் ஆற்றில் கடுமையான வெயிலுக்கு மத்தியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக வால்பாறை நகரில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாத நிலையில் வால்பாறை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் சோலையாறு அணைப்பகுதியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வால்பாறை பகுதியில் கூழாங்கல் ஆறு மட்டுமல்லாமல் சோலையாறு சுங்கம் ஆறு, வெள்ளமலை டனல் ஆறு மற்றும் சேடல் டேம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளித்து வருகின்றனர். எனவே ஆபத்துகள் ஏற்படாமல் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story