புனித உபகார அன்னை ஆலய திருவிழா தேர் பவனி


புனித உபகார அன்னை ஆலய திருவிழா தேர் பவனி
x

காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா தேர் பவனி நடைபெற்றது.

திருநெல்வேலி

பணகுடி:

காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணி திருத்தல அதிபர் இருதயராஜ் கொடியேற்றினார். விழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 8-ம் திருநாள் காலையில் புதுநன்மை திருப்பலி தக்கலை மறை மாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. மாலையில் ஜெபமாலை, நற்கருணை பவனி மறைவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது. தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்தந்தை ஸ்டாலின் மறையுரையாற்றினார்.

9-ம் திருநாள் மாலையில் திருவிழா மாலை ஆராதனை தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடந்தது. இரவில் அன்னையின் தேர் பவனி நடைபெற்றது. 10-ம் திருநாள் காலையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடந்தது. தொடர்ந்து உறுதிபூசுதல், மாலையில் புனித உபகார அன்னை அலங்கார தேர் பவனி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஆரோக்கியராஜ், உதவி பங்குதந்தை வினோத், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மேய்ப்பு குழுவினர், இறைமக்கள் செய்து இருந்தனர்.


Next Story