புனித சந்தன மாதா தேவாலய தேர் பவனி திருவிழா
குத்தாலம் அருகே செங்குடி கிராமத்தில் உள்ள புனித சந்தன மாதா தேவாலய தேர்பவனி திருவிழா நடந்தது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே செங்குடி கிராமத்தில் உள்ள புனித சந்தன மாதா தேவாலய தேர்பவனி திருவிழா நடந்தது.
சந்தன மாதா தேவாலயம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தில் புனித சந்தன மாதா தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 5-ம் ஆண்டு தேர் பவனி திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பேண்ட் வாத்தியம் இசை நிகழ்ச்சியுடன் வாணவேடிக்கைகள் முழங்க, மலர் மற்றும் மின்அலங்காரத்துடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் புனித சந்தன மாதா எழுந்தருளி கிராம மக்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் தேர்பவனி திருவிழா நடந்தது. முன்னதாக ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி
தங்கள் வீடுகள் தோறும் பக்தர்கள் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர்.மேலும் அதனைத் தொடர்ந்து நேற்று மயிலாடுதுறை உதவி பங்குத் தந்தை மைக்கேல் டைசன் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்று இறைமக்கள் அனைவருக்கும் உணவு உபசரிப்பு நடந்தது.
இந்த நிகழ்வில் செங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றனர். விழா ஏற்பாடுகளை செங்குடி கிராம தலைவர்கள், கிராமவாசிகள், மற்றும் விழா குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.