இல்லம் தேடி விதை வழங்கும் திட்டம்
திருக்கோவிலூா் அருகே இல்லம் தேடி விதை வழங்கும் திட்டத்தை வேளாண் துணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே நாயனூர் கிராமத்தில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான "இல்லம் தேடி உளுந்து விதை" வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சம்பா பருவத்தில் நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்யும் முறையை விவசாயிகள் அதிக அளவில் கடைபிடிக்கும் வகையில் விவசாயிகளின் வீடுகளை தேடிச்சென்று 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வினியோகம் செய்யும் திட்டத்தை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் பெரியசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாசி மாதத்தில் உளுந்து சாகுபடி செய்வதற்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதாகும். தொடர்ந்து நெல் சாகுபடிக்கு மாற்றாக உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் மண்வளம் பாதுகாக்கப்படும் என்றார்.
இதையடுத்து முகையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்ரமணியன் கலந்து கொண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தை விளக்கி கூறி 5 விவசாயிகளுக்கு கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள்கள், களைவெட்டி, இரும்பு சட்டி அடங்கிய வேளாண் உபகரண பெட்டகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முகையூர் வட்டார வேளாண்மை அலுவலர் வரதராஜன், துணை வேளாண்மை அலுவலர் புகழேந்தி, உதவி வேளாண்மை அலுவலர் வெங்கட கிருஷ்ணன், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவா, பயிர் காப்பீட்டாளர் ஏழுமலை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.