நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்களை விரட்டிவிரட்டி கொட்டிய தேனீக்கள்


நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்களை விரட்டிவிரட்டி கொட்டிய தேனீக்கள்
x

நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்களை விரட்டிவிரட்டி கொட்டிய தேனீக்கள்

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளத்தையடுத்த துங்காவியில் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தொழிலாளர்கள்

துங்காவி ஊராட்சிக்குட்பட்ட பாறையூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பணியாளர்கள் நேற்று காலை கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ கூட்டமாக பறந்து வந்த தேனீக்கள் திடீரென அனைவரையும் கொட்டத் தொடங்கியது. தேனீக்களிடமிருந்து தப்பிக்க அலறியபடி நாலாபக்கமும் சிதறி ஓடினர். ஆனாலும் விடாமல் துரத்திய தேனீக்கள் கூட்டம் விரட்டி விரட்டி கொட்டியது. பணியாளர்களில் பலரும் முதியவர்கள் என்பதால் தேனீக்களிடமிருந்து தப்பித்து ஓட முடியாமல் பல முறை கொட்டு வாங்கும் நிலை ஏற்பட்டது.

தேனீக்கள் கொட்டியதில் 12 பேருக்கு முகம், கழுத்து, கைகள் உள்ளிட்ட பகுதிகளில் காயம் மற்றும் வீக்கம் ஏற்பட்டது.உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு துங்காவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலத்த பாதிப்புக்குள்ளான 3 பேர் மேல் சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுமக்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்தில் கிராம நிர்வாக அலுவலர் அருண், ஊராட்சி செயலர் இளங்கோவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மடத்துக்குளம், காரத்தொழுவு, துங்காவி உள்ளிட்ட பகுதிகளில் தேனீக்கள் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்டும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story