கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

உள்ளிருப்பு போராட்டம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 55 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊதியத்தை 5-ந்தேதிக்குள் வழங்க வேண்டும்.

தொழில் வரி விதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர், குளித்தலை போலீசார், வருவாய்த் துறையினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

ஊதியம் வழங்கப்படும்

இதையடுத்து குளித்தலையில் உள்ள கருவூலத்திற்கு அதிகாரிகள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சென்று ஊதியம் மற்றும் தொழில் வரி தொடர்பாக கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த கருவூல அதிகாரிகள் கல்லூரி நிர்வாகத்தில் இருந்து கருவூலத்திற்கு பணம் வந்தவுடன் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொழில் வரி விதிப்பதை ரத்துசெய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு அவர்கள் அதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது தொழில் வரி பிடித்தம்போக மீதி உள்ள தொகை கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும் என கூறியுள்ளனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story