கவுரவ பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்


கவுரவ பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்
x

அரக்கோணம் அரசு கலைக்கல்லூரியில் கவுரவ பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என சு.ரவி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

ராணிப்பேட்டை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரக்கோணம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி பேசியதாவது:-

அரக்கோணம் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 1,500 ஏழை, எளிய மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 83 பேராசிரியர் பணியிடங்களில் 32 பேராசிரியர்கள்தான் இருக்கிறார்கள். இரண்டு வருடங்களாக 51 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதனால், அங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வி என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

எனவே, அந்த கல்லூரியில் காலியாகவுள்ள 51 பேராசிரியர் பணியிடங்களுக்கு, பேராசிரியர்களை நியமிக்கும் வரை உடனடியாக கவுரவ பேராசிரியர்களையாவது நியமனம் செய்து மாணவர்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்த ஆண்டு கவுரவ பேராசிரியர்கள் நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் பொறுப்பேற்ற போதே 4 ஆயிரம் பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நியமிக்க வேண்டுமென்று ஆணையிட்டு இருக்கிறார். அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக சிலர் கோர்ட்டை அணுகியிருக்கிறார்கள். அதனால், சற்று தடை இருக்கிறது. சட்ட மன்ற உறுப்பினர் சொல்வதைப்போல அங்கு காலியிடம் இருக்குமானால், நீங்கள் எழுதிக்கொடுங்கள், அங்கு கவுரவ பேராசிரியர்களை நியமிப்பதற்கு நிச்சயமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story