104 வயது சுதந்திர போராட்ட தியாகி கவுரவிப்பு
கடலூரில் 104 வயது சுதந்திர போராட்ட தியாகி கவுரவிக்கப்பட்டார்.
அரசு பணியில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கும், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் கருவூலம் மூலம் ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற அலுவலர்கள் மறைந்து விட்டால் அவர்களது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டுக்கு ஒரு முறை தாங்கள் உயிரோடு இருப்பதை தெரியப்படுத்தும் வகையில் வாழ்நாள் சான்றிதழை கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக அவர்கள் கருவூலத்தில் நடக்கும் நேர்காணலில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அதன்படி தற்போது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்று ஓய்வூதியர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஓய்வூதியர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் வந்து நேர்காணலில் பங்கேற்று செல்கின்றனர்.
இந்நிலையில் கடலூர் கருமாரப்பேட்டையை சேர்ந்த 104 வயது சுதந்திர போராட்ட தியாகி ஏகாம்பரம் நேர்காணலில் பங்கேற்க இருப்பதாக இருந்தது. இதை அறிந்த கருவூல அதிகாரிகள் அவரை அலைக்கழிக்காமல் அவரது வீட்டிற்கே சென்று கைரேகை மற்றும் முக செயலி மூலம் அவரது முகத்தை பதிவு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று இளநிலை உதவியாளர் பசுபதி தலைமையில் கணக்காளர்கள் ராஜேஸ்வரி, மணிமேகலை, ஜெயபாரதி உள்ளிட்ட கருவூலத்துறை அலுவலர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர். பின்னர் தியாகி ஏகாம்பரத்திற்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். தொடர்ந்து அவரிடம் கைரேகை, முகத்தை பதிவு செய்து நேர்காணல் நடத்தினர். வாழ்நாள் சான்றிதழையும் பெற்றுக்கொண்டனர். இதன் மூலம் அவருக்கு தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் கருவூல அதிகாரிகளின் மனித நேயத்தை பாராட்டினர்.